சமூக அடுக்கமைவு - மெக்ஸ் வெபர்

சமூக -அடுக்கமைவு - மெக்ஸ் -வெபர்
 சமூக அடுக்கமைவு - மெக்ஸ் வெபர்
 
.சமூக அடுக்கமைவு பற்றி ஆராய்ந்த மற்றுமொரு முக்கியமான சமூகவியலாளர் மெக்ஸ் வெபர் ஆவார். இவர் கால் மார்க்ஸை போன்று சமூக அடுக்கமைவிற்கு பொருளாதாரக் காரணிகள் முக்கியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் முற்று முழுதாக பொருளாதாரக் காரணிகளிலேயே சமூக அடுக்கமைவு உருவாகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூக அடுக்கமைவானது மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது என்கின்றார்.

செல்வம்

கௌரவம்

அதிகாரம்

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இவை மூன்றும் சமூகத்தில் முறையே வகுப்பு, அந்தஸ்து, அரசியல் ஆகிய கட்டமைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவை மூன்றும் சமூகத்தின் குழுக்களிடையே போட்டி, மனப்பாங்கு என்பவற்றை வளர்த்து விடுவனவாக இருக்கின்றது எனக் கூறுகின்றார்.

பொருளாதாரக் காரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வெபர் ஒரே மாதிரியான பொருளாதார விருப்பமுடையவர்கள் - தொழில், வருவாய் என்பவற்றில் ஒரே மாதிரியாக உள்ளவர்கள் யாவரும் ஒரே வகுப்பில் சேருவார்கள். வகுப்பு என்பது ஒரு சமூகமன்று.

இது ஒரு தொகுதி மக்களைக் கொண்ட குழுவாகும். இவ்விடயத்தில் மெக்ஸ் வெபர் வேறுபடுகின்றார். கார்ல் மார்க்ஸ் வகுப்பு உணர்வு என்பது முழு தொழிலாளர் படைக்கும் ஒன்றானது என வாதிடுகின்றார். ஆனால் வெபரோ வகுப்புணர்வு என்பது சமூதாயத்தின் கூறுகளிடையே தனித்தனியாக வேறுபடலாம் என்று கூறுவார். வெபரின்

இத்தகைய வகுப்புணர்வை நிரலபெற வைக்கும் காரணிகளாக,

1. ஒரு தொகுதி மக்கள் குறிப்பிட்ட பொதுவானதொரு வாழ்க்கை வசதியை வழமையான அங்கமாகக் கொண்டிருத்தல்.

2. சொத்துக்களை வைத்திருத்தல், வருமான வசதிகள், பொருளாதார விருப்பங்கள் என்பவற்றைப் பிரதிபலித்தல்.

3. சந்தைப் பொருளைத் தீர்மானித்தல்.

போன்றவை இனங்காணப்படலாம். அடிப்படைப் பொருளாதார உண்மை என்னவெனில் பல மக்களிடையே சொத்துக்கள் பங்கீடு செய்யப்படுகின்றன. இது வாழ்க்கை வசதிகளை உண்டாக்குகின்றது. சொத்து இல்லாதவர்களைச் சந்தையில் போட்டி போட முடியாதவாறு வைக்கின்றது. இது தனியுரிமையை ஏற்படுத்தும். சொத்துக்கள் - சொத்துக்கள் இல்லாதவர்கள் என்ற அடிப்படையிலேயே வகுப்பு உண்டாகின்றது.

சமூக அடுக்கமைவின் இரண்டாவது அம்சமாக மெக்ஸ் வெபர் குறிப்பிடுவது அந்தஸ்து ஆகும். சமூக ஒழுங்கின் அடியாக இது உருவாகின்றது. தனியாளின் அந்தஸ்து ஆனது அதிகமான பண்டம், சேவையின் சுரண்டலால் வரும் வருமான மூலமான பொருளாதார ஒழுங்கின்படி தீர்மானிக்கப்படுகின்றது. எந்தக் குழுவைச் செர்ந்த ஒருவரும் அந்தஸ்தைப் பெறமுடியும். ஒரே அந்தஸ்தையுடையவர்கள் ஒரே தொகுதியாகவும், ஒரே விழுமியங்கள், உளப்பாங்குகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றின் காரணமாக அடிக்கடி தமக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அந்தஸ்துக் குழுக்கள் ஒவ்வொன்றும் சமுதாயத்தில் தமக்குள்ள கௌரவத்தின் அடிப்படையில் பலதரப்படும். சொத்துக்களின் வித்தியாசங்கள் அந்தஸ்தில் காணப்பட்டாலும் எல்லா நேரங்களிலும் அவ்வாறு இருக்காது. சொத்துக்கள் இல்லாத வகுப்புகள் கூட ஒன்றாகச் சேர்ந்து ஒரு அந்தஸ்துக் குழுவை உருவாக்கிக் கொள்ளும். ஒரே அந்தஸ்துக் குழுவில் பரதரப்பட்ட வருமானமுடையவர்கள் இருப்பர். தங்களுடைய வாழ்க்கையைக் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக வித்தியாசமாக காண்பிக்க முற்படுவர். ஒரே அந்தஸ்துக் குழுக்கள் திருமண உறவுகளைத் தங்களுக்குள்ளேயே வைத்திருப்பர்.

வெபர் சமூக அடுக்கமைவில் மூன்றாவதாகக் குறிப்பிடுவது அதிகாரம் ஆகும். ஏனையவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய சக்தியை வெளிப்படுத்துவதுதான் அதிகாரம் என்கிறார் வெபர். இது அரசியல் ஒழுங்கின் படி வெளிப்படுத்தப்படுகின்றது. இது கட்சிகளினூடாக அதிகாரம் வெளிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ஒரு கட்சி தனது நடவடிக்கைகளை சமூதாயத்திலிருந்து அதிகாரத்தை எடுப்பதற்காக வகுத்துக் கொள்கின்றது. கட்சிகள் ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும். இது சிலநேரம் சமூகக்காரணமாகவோ, தனிப்பட்ட காரணமாகவோ, கட்சிசார்ந்த காரணமாகவோ இருக்கலாம். சில கட்சிகள் குறிப்பிட்ட வகுப்பினரையும், குறிப்பிட்ட அந்தஸ்துக் குழுவினரையும் கொண்டிருப்பதால் அவை குறிக்கப்பட்ட அவாவை மட்டும் கொண்டிருக்கும். கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அப்பட்டமான வன்முறைகளை எந்த வழியிலும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. மேலும் பணம், செல்வாக்கு உணர்ச்சிகரமான மேடைப் பேச்சுக்கள், அறிவுரைகள், பொய்யான வாக்குறுதிகள், தந்திரமான வழிமுறைகள், மோசடி முதலியவற்றைப் பயன்படுத்துவர்.

கல்வி உளவியல்   - Click Here

  சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

சமூக அடுக்கமைவு கார்ல் மார்க்ஸ் - மெக்ஸ் வெபர் வேறுபாடுகள் 

கார்ல் மாக்ஸ், மெக்ஸ் வெபர் ஆகியோரது சமூக அடுக்கமைவுக் கோட்பாட்டில் தௌ;ளத் தெளிவான வேறுபாடுகள் இருப்பதைக் கண்டுகொள்ளலாம். மாக்ஸைப் பொறுத்தவரை சமூக அடுக்கமைவிற்கு முற்றுமுழுதாக பொருளாதாரக் காரணிகளே அடிப்படையாகும். சுரண்டுபவர் - சுரண்டப்படுபவர் எனும் இரு முரண்பட்ட நிலைகளை அகற்றி  வர்க்க  பேதமற்ற  சமுதாயத்தை  உருவாக்குவதே  மாக்ஸின் இலட்சியமாக

இருந்தது. இதற்குத் தொழிலாளர்களின் வரையறையற்ற புரட்சி அவசியம் என்றார். பேதமற்ற    சமூகத்திற்கு    மேற்கட்டுமானத்திலிருக்கும்    ஒழுக்க விழுமியங்களை உடைத்தெறிய வேண்டுமென மாக்ஸ் முன்மொழிவார். மாக்ஸின் காலத்தின் பின்னர் தேசிய மற்றம் சர்வதேச ரீதியில் பலம் பொருந்திய தொழிலாளர் அமைப்புக்கள் தோன்றின. கைத்தொழில் புரட்சியால் புதிதாக மத்திய தர வர்க்கம் உருப்பெறத் தொடங்கியது. இதன் அபரிதமான வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாக்ஸ் தனது கோட்பாட்டில் புதிதாகத் தோன்றிய

இவ்வகுப்பினரைக் கணக்கில் எடுக்கவில்லை. ஆனால் வெபரோ இம் மத்தியதர வகுப்பினருக்கு அதிக அழுத்தம் கொடுத்து அதன்வழி சமூக அடுக்கமைவை இனம் காட்டுவார். வெபர் மார்க்ஸை போன்று பொருளாதாரக் காரணிகளுக்கு மக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை மார்க்ஸைப் போலன்றி அரசியல், சமூகக் காரணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறவில்லை. மேலும் வெபர் புரட்டஸ்தாந்து சமயத்தின் ஒழுக்கவியல் சிந்தனைகளே மத்தியதர வர்கத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிகோலியது என்று கூறி சமூக அடுக்கமைவில் ஒழுக்கவியல் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்வார்.

இன்று சமூக அடுக்கமைவு, சமூக வகுப்பு என்பன பற்றிப் பேசுகின்ற போது வருமானம், தொழில், கல்வி முதலியவற்றின் அடியான சமூக-பொருளாதார அந்தஸ்து நிலை என்பதனூடாக நோக்குகின்ற நிலை காணப்படுகின்றது. செல்வம், அதிகாரம், குடும்பப் பின்னணி என்பனவும் கருத்திலெடுத்துக் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக ஒரு ஆசிரியர் ஒரு வர்த்தகரை விட குறைவான வருமானத்தைப் பெற்றாலும் உயர் சமூக அந்தஸ்தில் வைத்து மதிப்பிடப்படுவதைக் காணலாம். ஆக சமூக அடுக்கமைவு தொடர்பாக மார்க்ஸ், வெபர் ஆகியோரது பார்வைகள் இன்று பரிமாணங்களை எடுத்துள்ளன. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப ஒருவருடைய சமூக நிலையை உணர்த்துவதற்கு புதிய புதிய காரணிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக அடுக்கமைவு தொடர்பாக புதியதொரு கோட்பாட்டுத் தேடல் அவசியமாகின்றது. எனினும் சமூக அடுக்கமைவு பற்றிய ஆய்வின் முன்னோடிகளான மார்க்ஸ், வெபர் ஈகியோரது சிந்தனைகள் புதியதொரு தேடலுக்கு அடித்தளமாக அமைகின்றது என்பதை மறுக்க முடியாது.


Post a Comment

0 Comments